தென்காசி, டிச.28:
கேரளாவில் இருந்து தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருமாநில எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது.
அங்கு கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். புளியரை சோதனை சாவடியில் உள்ள கொரோனா தடுப்பு மருத்துவ முகாமில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் பணியில் இருந்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா அறிவுரைப்படி இலத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி தலைமையில் வட்டார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள், கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்து உள்ளனரா? என்று சோதனை செய்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், ஒரு தடுப்பூசி மட்டும் செலுத்தி இருந்தால் அங்கிருந்து வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக பெறப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு இரண்டும் இல்லாத பட்சத்தில் அவர்களை புளியரை சோதனை சாவடியில் இருந்து மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
அதேபோல் வெளிநாட்டில் இருந்து கேரளா வழியாக வருபவர்களும் 2 தவணை தடுப்பூசி சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்.
அப்படி வைத்து இருந்தாலும் புளியரை சோதனை சாவடியில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் அவர்களை வீடுகளில் ஒரு வாரம் தனிமையை கடைபிடிக்கும்படியும், அதன்பிறகு அருகில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கூறி மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கின்றனர்.
இந்த சோதனை காரணமாக புளியரை சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதை காண முடிந்தது. இதேபோல் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்பவர்களை ஆரியங்காவு சோதனை சாவடியில் மருத்துவ குழுவினர் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். https://www.tnhealth.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today