தென்காசி, அக்.30:
தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் திறப்புவிழா காண்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது எனவே விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.என பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தென்காசியில் ஏற்கனவே உள்ள நீதிமன்ற கட்டிடங்கள் பல்வேறு இடங்களில் தனித்தனியாக அதுவும் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றது . எனவே அனைத்து நீதிமன்றங்களையும் அரசு ஒரே இடத்தில் கட்டவேண்டும். இதனால் மாதா மாதம் வாடகை கொடுப்பது தவிர்க்கப்படுவதோடு அனைத்து நீதிமன்றங்களும் ஒரே வளாகத்தில் கட்டப்பட்டுவிட்டால் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் எளிதாக பயன்பெறுவார்கள் என்ற நோக்கத்தில் தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி தென்காசி தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு முன்பாகவே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதன்படி தென்காசியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகிய நீதிமன்றங்கள் ஒரே வளாகத்தில் அமையவேண்டும் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்ட கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
ஆனால் அதற்கான இடம் தேர்வு செய்வதில் பல ஆண்டுகள் தாமதம் ஆனது. இறுதியில் 2016 ம் ஆண்டு தென்காசி – திருநெல்வேலி செல்லும் சாலையில் பழைய அரசு மருத்துவமனை இருந்த இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரூபாய்.12.15 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமும், ரூ.3 கோடி செலவில் நீதிபதிகள் குடியிருப்பும் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கான பணி தொடங்கியது. சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டுமான பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தது.
இதுபற்றி விசாரித்தபோது பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஒப்பந்தக்காரர்களும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டிவந்தனர்.
இந்நிலையில் 26.02.2020 அன்று நடைபெற்ற நீதிமன்ற கட்டிடங்கள் கட்டும் பணிகள் கண்காணிப்பு குழு கூட்டத்தில் நீதி அரசர்கள் எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் தென்காசி நீதிமன்ற கட்டடங்கள் கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு இந்தப் பணிகளை விரைந்து முடித்துவிட அறிவுறுத்தினார்கள்.
அதன்படி தென்காசியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடப் பணிகள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டும் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஆனாலும் உடனடியாக தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை திறப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதுபற்றி வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பகுதிகளில் மேலும் கூடுதலாக சில வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அந்தப் பணிகளை செய்து முடித்து விட்டால் நீதிமன்றம் திறப்பு விழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
இதுபற்றி நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பகுதிகளை கட்டி வரும் ஒப்பந்தக்காரர்கள் அரசு ஒதுக்கீடு செய்த பணத்திற்கும் மேலாக கூடுதலாக பணம் செலவழிக்கப்பட்டு விட்டது. இதற்கு மேலும் புதிது புதிதாக பணிகளை செய்யதேவையான நிதி இல்லை. எனவே மேலும் கூடுதலாக ஏதாவது பணிகளை செய்யவேண்டுமென்றால் அதற்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது.
எனவே தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்ட 2006ஆம் ஆண்டு அரசு ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் மிகவும் தாமதமாக பத்தாண்டுகள் கழித்து 2016 ம் ஆண்டு நீதிமன்ற கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அதன்படி 2019ஆம் ஆண்டு கட்டிட பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று திறப்பு விழா காண வேண்டிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் இன்று வரையிலும் திறப்பு விழாவிற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.
தற்போது தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் திறப்புவழா காண்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு நீதித் துறை, பொதுப்பணித் துறை மற்றும் நீதிமன்ற கட்டிட ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரை அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பதோடு உடனடியாக தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து ள்ளனர்.
படம் விளக்கம்
தென்காசியில் ரூபாய் 15 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் திறப்புவிழா காண்பதில் பல்வேறு தாமதங்களை சந்தித்து வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை படத்தில் காணலாம். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today