நெல்லை,  ஆக.13:

நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்தில்  நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் 6 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணி வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கள ஆய்வின்போது, குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநின்றதற்கான காரணங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் மூலம் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி முதலில் வயதுக்கு ஏற்ற வகுப்பில் மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும். 

அவர்களுக்கு கல்வி தன்னார்வலர் ஒருவர் மூலம் பயிற்சி வழங்கப்படும். 10 மாதங்கள் சிறப்பு பயிற்சி அளித்து ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அந்த மாணவர்கள் நிரந்தர பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.

மேலும் கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். இடைநிற்றல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து பிற துறைகளுடன் இணைந்து களஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும். 

கல்வி மேலாண்மை தகவல் இணையதளத்தில் பொது தொகுப்பில் உள்ள மாணவர்களின் விவரங்களை கண்டறிந்து அனைத்து பள்ளி வயது உள்ள குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சிவராஜ், கல்வி மாவட்ட அலுவலர்கள் ரேணுகா (நெல்லை), சுடலை (சேரன்மாதேவி), உஷா சாந்தாஜாய் (வள்ளியூர்) மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today