தென்காசி, நவ. 27:
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டாரத்தில் விவசாய விளை நிலங்களில் பசுமை சூழலை உருவாக்க புதிய வேளாண்காடு வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. செங்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை தற்போது விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக் கான இயக்கம் என்ற புதிய வேளாண்காடு வளர்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக செங்கோட்டை வட்டாரத்தில் 3500 மரக்கன்றுகளை வேளாண் பெருமக்களுக்கு வழங்கும் நோக்கோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் தேக்கு, செம்மரம், வேங்கை, செஞ்சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகளை வேளாண்பெரு மக்களுக்கு தமிழக வேளாண்மை துறை இலவசமாக வழங்கி வருகிறது. வரப்பில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 50 கன்றுகளும் தனிப்பயிராக சாகுபடி செய்பவர்களுக்கு 160 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை உயிருடன் இருக்கும் கன்றுக்கு கன்று ஒன்றுக்கு 7 ரூபாய் வீதம் பராமரிப்பு தொகையாக வழங்கப்பட உள்ளது. செங்கோட்டை வட்டாரத்தில் மரக்கன்றுகளை வழங்கி வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா இத்திட்டம் பற்றி கூறும் போது, தமிழக வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலமாக பதிவு செய்த விவசாயிகளுக்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கன்று வழங்கப்படுகிறது.
மேலும் கன்றுகளை நட்ட பின்னர் இந்த கன்றுகளை பராமரிப்பது எவ்வாறு என்பது பற்றி வேளாண் பெருமக்களுக்கு வனத்துறை மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தால் மரக்கன்று நடவு செய்யும் வேளாண் பெருமக்களுக்கு பசுமை பாதுகாப்பு செய்யப்படுவதோடு வருங்காலத்தில் ஒரு நிரந்தர வைப்புத் தொகையாக மர நடவு இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் மற்றும் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கோட்டை வட்டாரத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள் குமார், அருணாச்சலம், சிவக்குமார், ரமேஷ், ஜலால் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
https://www.forests.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today