தென்காசி, அக்.19:
பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தில் பிசானம்
பருவ நெல் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவ நெல் சாகுபடிப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. நெற்பயிர்களில் எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் மகசூல் குறைவோ இழப்போ ஏற்படும்போது திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகள் உரிய இழப்பீடு பெற வழிவகை உள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் பிசாணம் பருவத்திற்கு அக்ரிகல்சரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனம் செயல்படுத்துகிறது. இதற்கு ஏக்கர் ஒன்றுக்கு விவசாயிகள் பிரிமியமாக ரூ.466 செலுத்த வேண்டும். பிரிமியம் தொகையினை பொதுசேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ செலுத்தலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் உரிய படிவத்தில் வழங்கும் அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல் ஆகியவை அவசியமாகும். விதைப்பதற்கு முன்பு காப்பீடு பதிவு செய்யவும் தடுக்கப்பட்ட விதைப்பு வகையில் பலன் பெறவும் மட்டும் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் விதைப்பு சான்று அவசியமாகும்.
விருப்பமுள்ள விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று சரியான புல எண்ணுக்கு சரியான பரப்புக்கு மட்டும் பிரிமியம் செலுத்தவேண்டும். ஒரே புல எண்ணுக்கு மீண்டும் மீண்டும் பிரிமியம் செலுத்துதல் அடங்கலில் உள்ள பரப்பைவிட கூடுதல் பரப்புக்கு பிரிமியம் செலுத்துதல், அடங்கலில் குறிப்பிடப்படாத பயிருக்கு பிரிமியம் செலுத்துதல், ஒன்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒரே இடத்தில் சாகுபடி செய்யப்படும் பயிருக்கு பிரிமியம் செலுத்துதல் போன்ற தவறுகள் எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரிமியம் செலுத்திய இரசீது பெற்றவுடன் அதில் உள்ள விபரங்கள் சரிதானா என பார்த்து உறுதி செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நடப்பு பிசானம் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்களை காப்பீடு செய்ய தென்காசி மாவட்டத்துக்கு 15.12.2021 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களையோ வேளாண்மைத்துறை அலுவலர்களையோ அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. https://www.pmindia.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today