தென்காசி, நவ. 11:
மழையால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதுகுறித்து வேளாண் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என விவசாயிகளை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்று வீசும் என்பதால் தென்காசி மாவட்ட விவசாயிகள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பயிர்களைக் காத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிக மழை காரணமாக நெற்பயிர்கள் பாதிப்படைந்து மஞ்சள் நிறமாக மாறவாய்ப்புள்ளது. எனவே அதிகப்படியான நீரை வடித்து விட்டு இளம் பயிர்களுக்கு ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவினை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகள் மீது நன்கு படும்படி தெளிக்கவேண்டும். பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ ஜிப்சம் வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து அக்கலவையுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்திட வேண்டும்.
தண்டு உருவாகும் பருவத்திலும் பூக்கும் பருவத்திலும் உள்ள பயிர்களுக்கு 1.4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டர் நீரில் முதல் நாள் ஊர வைத்து மறுநாள் வடிகட்டி அக்கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும். இவ்வாறு தெளிப்பதினால் மகசூல் இழப்பு ஏற்படாமல் பயிரைக் காப்பாற்றலாம்.
மேலும் பூச்சிகள் மற்றும் நோய்களின் பாதிப்பை கூர்ந்து கண்காணித்து தேவைக்கேற்ப பயிர் பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் பயிர்களை விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து பயிர் இழப்பை தவிர்க்க வேண்டும். நெல் பயிர்களை காப்பீடு செய்ய 15.12.2021 இறுதி நாளாகும். காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு பிரிமியமாக ரூ.466ஃ- செலுத்த வேண்டும்.
மேலும் வடகிழக்குப் பருவமழையின் போது கனமழையினால் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படும் சூழலில் புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்க விவசாயிகள் தக்க பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும். நல்ல காய்ப்புள்ள தென்னந்தோப்புகளில் முதிர்ந்த தேங்காய்களை அறுவடை செய்ய வேண்டும். தென்னை மரங்களின் கொண்டைப் பகுதியிலுள்ள அதிக எடை கொண்ட ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
தென்னை காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் காப்பீட்டுத் தொகையாக 4 முதல் 15 வயது வரையுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு ரூ.2.25, 16 முதல் 60 வயது வரையுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு ரூ. 3.50 அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியாலிட் நிறுவனத்திற்கு வங்கி காசோலையாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்.
இந்தப் பருவத்தில்; மானாவாரியாக மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு விதைக்கப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகிவிடாதிருக்க தக்க வடிகால் வசதி செய்ய வேண்டியது அவசியம். மழையால் பயிர்களுக்குப் பாதிப்பு ஏதேனும் ஏற்படின் வட்டாரஅளவிலான வேளாண் துறை அலுவலர்களை விவசாயிகள் உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in, https://www.tnagrisnet.tn.gov.in,
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today