தென்காசி, நவ. 1:

தென்காசி மாவட்டத்தில் சீன பட்டாசுகளை விற்பனை செய்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-எதிர்வரும், தீபாவளி பண்டிகை மற்றும் இன்ன பிற நிகழ்வுகளின் போது, மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதிகாக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் இரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள்  மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ சேமித்து வைக்கவோ ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழிகாட்டு நடைமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  

உரிமம் பெற்ற பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரசாக்குகள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். புகைபிடிக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகையை கடையில் வைப்பதோடு அருகில் யாரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக்கூடாது. மின்தடை ஏற்படும்பட்சத்தில் மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்குகள், தீக்குச்சிகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. டார்ச், பேட்டரி விளக்குகளை மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்தவேண்டும்.

உதிரி பட்டாசுகளை விற்பனை செய்வதைத் தவிர்க்கவேண்டும். கடைகளை மூடும் போது அனைத்து  மின் இணைப்புகளையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பெயிண்ட், எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்தல்கூடாது.

உரிமம் பெறப்பட்ட கட்டிடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்யவேண்டும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் விற்பனை செய்யக்கூடாது. சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து, பொதுமக்கள் 04633-290548 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in,

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today