தென்காசி,  அக்.22:

தொண்டர்களின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன் என ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறினார்.

ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துரை வைகோ  சங்கரன்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தலைமை கழக செயலாளராக நான் நியமிக்கப்பட்டு உள்ளேன். இந்த பதவியை பொதுச்செயலாளர் வைகோவால் நேரடியாக அறிவிக்க முடியும்.

ஆனாலும் அவர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினார். அதில் வாக்களித்த 106 பேரில் துரை வைகோ கட்சியில் பணிபுரிய வேண்டும் என 104 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 2 பேரும் வாக்களித்துள்ளனர். 

எனக்கு வாக்களிக்காத 2 பேரும் எனக்கு வாக்கு அளிக்கவில்லையே என்று நினைக்கும் வகையில் நான் செயல்படுவேன்.

என் மீது நம்பிக்கை வைத்து கட்சி எனக்கு அளித்த பதவியின் பொறுப்பை உணர்ந்து தொண்டர்கள், நிர்வாகிகள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பாடுபடுவேன். தொண்டர்களின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன்.

தமிழகத்தில் ம.தி.மு.க.வை பொறுத்தவரை 6 சதவீதம் வைத்திருந்த வாக்கு வங்கி, தற்போது சில ஆண்டுகளாக குறைந்துள்ளது. இ்ந்த வாக்கு வங்கியை உயர்த்த பாடுபடுவேன். 

எனது தங்கை தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரை கூட பார்க்க செல்ல முடியாத நிலை என் தந்தைக்கு உள்ளது. இதை சுட்டிக்காட்டி தற்போது கனடாவில் படித்துவரும் எனது மகள், நீங்களும் அரசியலுக்கு வந்துவிட்டால் தாத்தா போல் ஆகிவிடும் என என்னிடம் வருத்தப்பட்டு கூறினார்.

இது எனக்கு மன வலியாகத்தான் இருந்தது. நான் அரசியலுக்கு வந்து இருப்பது வலி நிறைந்த முடிவு. இவ்வாறு அவர்  கூறினார். https://www.mdmk.org.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/