தென்காசி,   சூலை 11-

குற்றாலம் மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் குளிர்ந்த காற்றுடன் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்தும் உள்ள ஜப் அதிகரித்துள்ளது.


குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும். அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
குற்றாலத்தில் இந்த குளிர்ச்சியான, இதமான, சூழ்நிலையை அனுபவிக்கவும்,  அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்கவும்,  நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகை தருவார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு சீசன் காலம் மற்றும் ஐயப்ப சீசன் காலங்களில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.


அதைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.  இந்நிலையில் குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையினால்  மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி, கரடி அருவி, குண்டர் தோப்பு அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


ஆனாலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அருவிகளில் குளிப்பதற்கும்,  அருவிகளின் அருகில் சென்று பார்ப்பதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். அனைத்து அருவி பகுதிகளுக்கும் செல்லும் பாதைகள் தட்டி வைத்து அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


 அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழும் நிலையிலும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லாததால்  அனைத்து அருவிகளிலும் விழும் தண்ணீர் சுற்றுலா பயணிகளுக்கு பயன்இல்லாமல் வீணாக கால்வாய்களில் போய் சேர்கிறது.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today