தென்காசி, நவ. 29:

தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அருவிகளை வேடிக்கை பார்க்கும் மக்களை அச்சுறுத்தும் அளவுக்கு காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் அருவிகளின் பக்கமே  செல்லாத வகையில் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு குற்றாலம் பஜார் பகுதிக்குள் புகுந்தது. இதனால் திருக்குற்றால நாதர் கோவில் வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் குற்றாலம் அண்ணாசிலை அருகில் உள்ள மேம்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் குற்றாலத்தில் போக்குவரத்து தடைபட்டது. மேலும்  பல்வேறு வீடுகள், கடைகள், லாட்ஜ்களிலும்  தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், பகுதிகளில் உள்ள ஏராளமான குளங்கள் ஏரிகள் நிரம்பி வருகின்றன. தென்காசி மாவட்ட  பகுதியில் உள்ள குண்டாறு அணை, அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை, கடனாநதி அணை, உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பியுள்ள நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அணைகளிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் ஏற்கனவே கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அருவியின் பக்கம் நெருங்கி விடாதபடி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today