தென்காசி, நவ. 11:
தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்ய இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்ய இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். அடையாள அட்டை, கல்வி சான்றிதழ்கள், நிலப்பட்டா, பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை நெகிழி பைகளில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வீடுகளின் அருகாமையில் அறுந்த மின்கம்பிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், உடைகளை உலர்த்த மின்கம்பிகளை உபயோகிக்க கூடாது.
தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினைக் கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதற்கு அலுவலர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
டார்ச் லைட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் மற்றும் உலர்ந்த உணவு வகைகளை நெகிழி பைகளில் வைத்து எடுத்துச் செல்ல ஏதுவாக வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்காமல், கால்நடைகள் தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.
மழைக்காலங்களில், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தனியாக வெளியில் செல்லாமல் தவிர்க்கவேண்டும்.
ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.
தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் காயப்பட நேர்ந்தால் உடனே மாவட்ட கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்.1077 தொடர்பு கொள்ள வேண்டும்.
இடி மற்றும் மின்னல் ஏற்படும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today