நெல்லை, நவ.18:

நெல்லை மாவட்டத்தில் கன மழை பெய்ததால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. ஆறு, குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

இதனால் கடந்த சில நாட்களாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருகரைகளையும் தொட்டப்படியும், குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடியும் தண்ணீர் சென்றது. கடந்த 3 நாட்களாக மழை குறைந்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளமும் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலையில் நெல்லை மாநகர பகுதிகளான நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடந்தது.

சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக மோசமான நிலையில் காணப்பட்டது. நெல்லை தற்காலிக புதிய பஸ்நிலையத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கி காணப்பட்டது. இதனால் பஸ்களில் ஏறுவதற்கு பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்ல பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளிக்கூடம், கல்லூரி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ-மாணவிகள் தவித்தனர். நெல்லை வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதி அருகில் ஏராளமான மாணவ-மாணவிகள் மழைக்கு ஒதுங்கி நின்றனர். மழை நின்ற பின்னர் அவர்கள் தங்களது ஊருக்கு செல்லும் பஸ்களில் முண்டியடித்து ஏறிச்சென்றனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், ராதாபுரம், பணகுடி, வடக்கன்குளம், நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வாகன ஓட்டிகள் முன்புற விளக்குகளை எரிய விட்டு வாகனங்களில் சென்றனர். இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்கனவே 20, 000 கன அடிக்கு மேல் வெள்ளம் போய்க்கொண்டு இருக்கும் சூழலில், பாபநாசம், காரையார் அணை, சேர்வலார் அணை மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால், மேற்க்கண்ட அணைகளிலிருந்து நீர்த்திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. https://www.tnschool.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today