தென்காசி, டிச.2:

தென்காசி மாவட்ட விவசாயிகள் தங்கள் மண் வளத்தை பாதுகாத்திடவும், அதிக மகசூல் பெறவும் திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்துமாறு தென்காசி வேளாண்மை இணை இயக்குநர்  தெரிவித்துள்ளார்.‌ இதுபற்றி தென்காசி வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா கூறியதாவது:-

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு தெரிவிப்பது என்னவென்றால்  இரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாடு தேவைக்கு அதிகமாக இருந்தால்  மண்ணின் வளமானது  பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே  விவசாயிகள் சுற்றுப்புற சூழலுக்கு உகந்த உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில்  மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மண் வளம் பாதுகாக்கப்பட்டு  அதிக மகசூல் பெறலாம்.

தென்காசியில் வேளாண்மைத் துறையின் கீழ் திரவ உயிர் உரம் உற்பத்தி மையத்தின் மூலம் 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு  வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு  வினியோகம் செய்யப்படுகிறது.

எனவே திரவ உயிர் உரங்கள் உற்பத்தியில் நெற்பயிருக்கான  அசோஸ்பைரில்லம், நெல் தவிர இதர பயிர்களுக்கான அசோஸ்பைரில்லம், பயறு வகை  பயிர்களுக்கான ரைசோபியம், நிலக்கடலைக்கான  ரைசோபியம், அனைத்து பயிர்களுக்குமான பாஸ்போ பாக்டீரியா, தழை மற்றும் மணி சத்தினை  ஒருங்கே பயிருக்கு அளிக்கக்கூடிய திரவ அசோபாஸ் மற்றும் சாம்பல் சத்தினை பயிருக்கு அளிக்கக்கூடிய திரவ பொட்டாஷ் உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகியவை காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவினை  நிலைப்படுத்தி  தழைச்சத்தாக மாற்றி பயிருக்கு அளிக்கிறது. மேலும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரமானது மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணி சத்தினை கரைத்து அனைத்து வகை பயிர்களுக்கும்  மணி சத்தினை அளிக்கிறது. திரவ பொட்டாஷ் சாம்பல் சத்தினை கரைத்து அனைத்து பயிர்களுக்கும் அளிக்கிறது.

மேலும் உயிர் உரங்களினால் பல்வேறு நன்மைகள் உள்ளது. குறிப்பாக இரசாயன உரங்கள் மீதான 20-25 சதவீத செலவீனம் குறைக்கப்படுகிறது. பயிரின் நோய் எதிர்ப்பு திறன் மேம்படுகிறது. பயிர்களுக்கு வறட்சி தாங்கும்  சக்தியை அளிக்கிறது. மேலும் மகசூல் 10-25 சதவீதம் அதிகரிக்கிறது.

மண்ணில் உயிரியல் செயல்பாட்டை அதிகரித்து மாசற்ற சூழல் மற்றும் நச்சுத் தன்மையற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது.விவசாயிகள் தங்களது மண் வளத்தை பாதுகாத்திடவும், அதிக மகசூல் பெறவும்  திரவ உயிர் உரங்களை  பயன்படுத்துமாறு தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்  நல்லமுத்துராஜா தெரிவித்துள்ளார். https://www.tnagrisne.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today