தென்காசி, டிச.15:

தென்காசி கல்வி மாவட்டம் பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு மையத்திற்கு அனுமதி பெற்றுத் தந்த தென்காசி தெற்கு  மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 400க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுத சுமார் 4 கி.மீ. தொலைவுள்ள மாதாப்பட்டணம் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது.

எனவே மாணவர்கள் நலன் கருதி பூலாங்குளத்தில் அரசு பொதுத்தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் இப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பூபாலசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அயோத்தியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் பயனடைவர் என்றும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் நேரில் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு மையம் செயல்பட அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர்  அனுமதி அளித்து பள்ளித் தலைமை ஆசிரியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து பூலாங்குளம் அரசு பள்ளியில் தேர்வு மையம் செயல்பட அனுமதி பெற்றுத்தந்த திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்  பொ.சிவபத்மநாதனுக்கு, பூலாங்குளம் ஊர் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.  முன்னாள் ஊராட்சித்தலைவர் குணரத்தினம் தலைமையில் நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர். https://www.tnschools.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today