தென்காசி, அக். 3:

தென்காசியில் உத்தமர் காந்தியடிகளின் 153 வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகளின் 153-வது பிறந்த நாளையொட்டி அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்தை தென்காசி மாவட்ட தேர்தல் பார்வையாளர் மற்றும் தலைமை செயல் அலுவலர் (கதர் கிராம தொழில் வாரியம்) முனைவர் பொ.சங்கர், தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் முன்னிலையில், திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையினை தொடங்கி வைத்தார்.


உத்தமர் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.


தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் மற்றும் பெருமாள்பட்டி ஆகிய 2 கிராமிய நூற்பு நிலையங்களும்,  கீழப்பாவூரில் கதர் உபகிளையும் மற்றும் பாவூர்சத்திரத்தில் கதர்அங்காடியும் செயல்பட்டு வருகிறது. 2 கிராமிய நூற்பு நிலையங்களிலும் 84 நூற்பாளர்கள் மற்றும் கீழப்பாவூர், வீரவநல்லூர் மற்றும் சங்கரன்கோவிலில் 15 நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.


 இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படடு, அவர்களின் பொருளாதாரநிலை உயர்வு செய்யப்பட்டும் உத்தமர் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைப்பிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  


தென்காசி மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக 2020-21 ஆம் ஆண்டிற்கு ரூ.50.30 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.38.93 இலட்சம் விற்பனை எய்தப்பட்டுள்ளது.   கிராமப் பொருட்கள் ரூ.35.58 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகையாக 606 பயனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5000/-வீதம் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.


 உத்தமர்; காந்தியடிகளின் 153-வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் 02.10.2021 முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படும். மேலும், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன் குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்று கதர் மற்றும் பாலிவஸ்திரா ரகங்களுக்கு 30%-ம், உல்லன் ரகங்களுக்கு 20%-ம் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.

அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.

இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்திற்கு கதர் விற்பனைக் குறியீடாக ரூ.32.55 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, கிராம தொழில் கூட்டுறவு அலுவலர் சரவண ராஜா, கதர் அங்காடி மேலாளர் ஹென்றி ஜோசப், பனை வெள்ள அமைப்பாளர் குமரேசன் உட்பட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/