தென்காசி, சூலை 9-
தென்காசியில் உள்ள பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் விற்பனை மையத்தில் தென்மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஹேமலதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி – திருநெல்வேலி சாலையில் மட்டப்பா தெருவில் பாரத் என்ற பெயரில் செல்லப்பிராணிகள் விற்பனை மையம் உள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான வன பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் ஹேமலதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செல்லப்பிராணிகள் விற்பனை மையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பறவைகளை பார்வையிட்டு அதுகுறித்து ஆய்வு நடத்தினார். மேலும் செல்லப்பிராணிகள் விற்பனை மையம் நடத்தி வருபவர்கள் தங்களது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பறவை இனங்களின் பட்டியலை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி விற்பனைக்கு அனுமதி இல்லாத பறவைகளை கைவசம் வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம் ஆகும். எனவே விற்பனை மையம் நடத்துபவர்கள் விற்பனைக்கு அனுமதி இல்லாத பறவை இனங்களை வைத்திருப்பது தெரிய வந்தால் தகுந்த அபராதம் விதிப்பதுடன் சட்டப்படி வழக்கு தொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இரவு நேரத்தில் வனத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிருபர் நெல்லை டுடே