தென்காசி,  அக்.30:

மானாவாரி பயிர்கள், பூ, தேங்காய்களுக்கு அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என தென்காசி மாவட்ட விவசாயிகள், குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அனைத்து இடங்களிலும் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைத்ததற்கு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் புளியரை பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குளங்களை தூர்வாரி, மதகு அமைத்து கொடுத்ததற்கு விவசாய சங்க தலைவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் பிசான பருவம் தொடங்கி உள்ள நிலையில் அனைத்து உரக்கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயத்திற்கு தேவையான உரங்களை தேவைக்கேற்ப வழங்கிடவேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். 

இன்னும் ஓரிரு நாட்களில் உரங்கள் அனைத்து இடங்களிலும் தட்டுபாடின்றி கிடைக்கப்பெறும் என்று கூட்டுறவுத் துறை மூலமாக தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து சிறப்பாக செயல்படுத்துவது போல பூக்கள், மானாவாரி பயிர்கள் மற்றும் தேங்காய்களுக்கும் அரசே நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை வணிகத்துறை மூலமாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) ராதை, வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) கிருஷ்ணகுமார், உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்டஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த பபடம். https://www.tenkasi.nic.in 

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today