தென்காசி , செப். 25-

சிவகிரி கோனார் குளம் ஓடை, வடகால், தென்கால் ஓடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மழை பெய்யும்போது அதில் இருந்து பெறப்படும் தண்ணீர் சின்னஆவுடையா பெரியபேரி கால்வாயில் வந்து வடக்கு, தெற்காக இரண்டு பக்கமாக பிரிந்து செல்லும். வடபக்கமாக செல்லும் கால்வாய் தண்ணீர் கோம்பை குளத்தில்சேரும். மேலும் அக்குளம் நிரம்பியதும் கோனார்குளம், கலங்கல்கோனார் குளம் ஓடை வழியாக கிழக்கு நோக்கி விஸ்வநாதப்பேரி சத்திரம் பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் செல்லும்.
தெற்கு பக்கமாக செல்லும் தண்ணீர் விஜயரங்கப்பேரி குளம், வடகால், தென்கால் ஓடை கால்வாய்கள் வழியாக வடகால், தென்கால் குளங்களுக்குச் செல்லும்.

தண்ணீர் செல்லும் கால்வாய்கள் தற்போது புதர் மண்டி செடி,கொடி, மரங்களால் நிரம்பி காணப்படுகிறது. இதனால் இந்த கால்வாய்களில் மழை காலங்களில் தண்ணீர் வரத்து என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் பெருகாமல் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கால்வாய்களில் தண்ணீர் செல்லமுடியாமல் இருப்பதால் மழை காலங்களில் கால்வாய்களில் செல்ல வேண்டியதண்ணீர் ஊருக்குள் புகுந்து பலத்த சேதத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. வீணாகச் செல்லும் தண்ணீரால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும்இல்லாமல் இருக்கிறது.


விவசாயிகள் பயிர் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைத்திடவும், மழை காலங்களில் ஊருக்குள்புகுந்து விடும் வெள்ளத்தினை தடுத்துநிறுத்திடவும் தண்ணீர் வரும்கால்வாய்களை தூர்வாரி அதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/