தென்காசி, அக்.5:
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021-ஐ முன்னிட்டு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்களுக்கு தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர்; முனைவர் பொ.சங்கர், தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 06.10.2021 அன்றும், கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 09.10.2021 அன்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்ட தேர்தல் 754 வாக்குப்பதிவு மையங்களிலும், இரண்டாம் கட்டமாக 574 வாக்குப்பதிவு மையங்களிலும் ஆக மொத்தம் 1328 மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 10638 வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் பணியாற்றவுள்ளனர். சிரமமின்றி வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 347 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு. இதில் 122 பதற்றமான வாக்குச்சாவடிகளில் நேரடியாக கண்காணிக்க வெப் கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளது. மற்ற அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 109 நுண்பார்வையாளர்கள் மூலம் மீதமுள்ள வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவுள்ளனர்.
தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் வாக்கு பெட்டிகளை வாக்குப்பதிவிற்கு தயார் செய்வது முதல், வாக்கு பெட்டிகளை மண்டல அலுவலர்களுக்கு திரும்பி வழங்கும் வரை உள்ள அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்து தேர்தல் பார்வையாளர்களுக்கு அறிக்கை அனுப்ப தேர்தல் பார்வையாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுண்பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்தின் கண்கள் என்றும், நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு முகவர்களையும், வாக்குப்பதிவு நடைமுறைகளையும் கவனமாக கண்காணித்து அறிக்கையினை அனுப்ப வேண்டுமென தேர்தல் பார்வையாளர் முனைவர் சங்கர் கேட்டுக்கொண்டார்.
வாக்குப்பதிவு மையத்தில் எந்த பிரச்சசனைகளும் எற்பாடத வண்ணம் கண்காணித்து சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) குருநாதன், நுண்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். https://www/tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/