தென்காசி, சூலை 11-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஏ.கரிசல்குளம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீட்டுத் தொகை 4 ஆண்டுகளாக வழங்கப்படாத நிலையில் அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி யின் மகன் துரை வைகோ,
வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர் சதன்திருமலைக் குமார், சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ.ராஜா, தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா ஏ.கரிசல்குளம் ஊராட்சி பகுதியில் கடந்த 2016- 17 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் 421 விவசாயிகள் 895.30 ஹெக்டேரில் பயிர் செய்த மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு தொகை 2,87,85,652 ரூபாய்க்கான பிரீமியம் தொகையினை திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் செலுத்தி காப்பீடு செய்திருந்தனர்.
மேற்படி பிரீமியர் தொகையான ரூபாய் 4,32,334 ஐ திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ஐசிஐசிஐ நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தனர். ஆனால் ஐசிஐசிஐ காப்பீடு நிறுவனம் அந்த பணத்தை ஏ.கரிசல்குளம் என்பதற்குப் பதிலாக கே. கரிசல்குளம் என்று தவறுதலாக குறிப்பிட்டு விட்டனர். இதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டுத் தொகை கடந்த நான்கு ஆண்டுகளாக கிடைக்கவில்லை.
இதுபற்றி தகவலறிந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கடந்த ஆண்டு வேளாண்மை துறை செயலாளராக இருந்த சுகன்தீப்சிங்பேடி ஐஏஎஸ் அதிகாரியிடம் இந்த பிரச்சினையை விளக்கமாக எடுத்துக் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட சுகன்தீப்சிங்பேடி ஐஏஎஸ் கடந்த 01.11.2020 அன்று ஏ.கரிசல்குளம் விவசாயிகள் 421 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையாக தலா 13,050 ரூபாய் வழங்க (அரசாணை எண்.132) உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஏ.கரிசல்குளம் கிராமத்தில் 421 விவசாயிகள் காப்பீடு செலுத்திய மொத்தம் 895.30 ஹெக்டேர் நிலம் என்பதற்கு பதிலாக தவறுதலாக 95.30 ஹெக்டேர் நிலம் என்று தவறுதலாக குறிப்பிட்டு விட்டனர்.
இரண்டாவது முறையாக திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர் செய்த எழுத்து பிழையால் ஏ.கரிசல்குளம் விவசாயிகள் 421 பேருக்கும் கிடைக்க வேண்டிய தலா ரூபாய் 13.050 க்கு பதிலாக ரூபாய் 1000 மட்டுமே வழங்கப்பட்டது.
வங்கி அலுவலர்கள் செய்த எழுத்துப் பிழையினால் 421 விவசாயிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்க வேண்டிய நியாயமான காப்பீட்டுத்தொகை கிடைக்க தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் ஏற்ப்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சங்கரன்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் சிறப்பாக ஆடித்தபசு திருவிழா கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவலால் நடைபெறவில்லை.
எனவே இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழாவினை சிறப்பாக நடத்திட மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவுகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில தேர்தல் பணி துணைச் செயலாளர் சுதா பாலசுப்பிர மணியன், குருவிகுளம் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் வ.சீனிவாசன், நகர மதிமுக செயலாளர்கள் தென்காசி என். வெங்கடேஸ்வரன், சங்கரன்கோவில் ஆறுமுகசாமி, புளியங்குடி ஜாகிர் உசேன், சங்கரன்கோவில் நகர மதிமுக துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், திருவேங்கடம் பேரூர் மதிமுக செயலாளர் சுரேஷ், மதிமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அ.சுரேஷ் (எ) சுப்பையா மற்றும் ஏ. கரிசல்குளம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே