தென்காசி,  சூலை 20:

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை  வாங்க வேண்டாம் என்று  பொதுமக்களை வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்தில் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.  

கூட்டத்தில் வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், நில நிர்வாக ஆணையர் நாகராஜன், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்  விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ராஜா, ரூபி மனோகரன், சதன் திருமலைக்குமார், நயினார் நாகேந்திரன், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மற்றும் 3 மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தருவையை சேர்ந்த காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் 144 பேருக்கு சாதி சான்றிதழ், 751 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை, 550 பேருக்கு வீட்டுமனை பட்டா, 49 பேருக்கு ஸ்மார்ட் கார்டு என மொத்தம் ரூ.2.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்   நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்துக்கு 43,803 மனுக்கள் வந்துள்ளது. அதில் 13,462 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பட்டா வழங்குதல் சர்வே செய்வதில் இருக்கும் தாமதத்தை உடனடியாக நிவர்த்தி செய்யவும், உட்பிரிவு அளவீடு பிரச்சினைகளை வாரம் ஒருமுறை ஆய்வு நடத்தி குறைகளை நிவர்த்தி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 உழவர் பாதுகாப்பு திட்டத்தை விரிவுபடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டும் அதற்கு தேவையான வருவாய் கோட்டம் மற்றும் புதிய தாலுகாக்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறது. அதற்கான ஆணையை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பிப்பார்.

கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் கேட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் கொரோனா காலத்தால் நிரப்பப்படாமல் உள்ளது. விரைவில் அந்த பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இலவச பட்டாக்கள், வீட்டுமனை பெற்ற பலர் வீடுகள் கட்டாமல் இருப்பதால், அந்த பிரச்சினையை தவிர்க்க பட்டா வழங்கும் போதே சர்வே செய்து அவர்களுக்கான இடங்களை லே-அவுட் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவான அன்றே அந்த இடத்துக்கான பட்டா மாறுதலும் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும், பொதுமக்கள் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம். அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது.

அரசுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும்போது உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய தளர்வுகளுடனான சந்தை விலையை வழங்கி பணிகள் தடையில்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today