தென்காசி, டிச.23:
தென்காசியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்டத் தலைவர் சு.பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.
மாவட்ட இணைச் செயலாளர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார் மாவட்ட துணைத் தலைவர் ராமநாதன் வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெ.சண்முகசுந்தரம் கோரிக்கைகளை விளக்கி வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் கடந்த ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப் பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்து அவரை பணி ஓய்வில் செல்ல உடனடியாக உரிய ஆணைகள் வழங்க வேண்டும்.
வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களும் வழங்க அரசு உரிய ஆணை வெளியிட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். முழு சுகாதார திட்ட வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்திப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் பிரிதிவிராஜன் மாநில செயற்குழு உறுப்பினர் பழனி மாவட்ட பொருளாளர் மாணிக்க வாசகம், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோயில் பிச்சை, சமூக நலத்துறை மாநில பொதுச்செயலாளர் துரை சிங், பொது சுகாதாரத்துறை மாநிலத் தலைவர் கங்காதரன், செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ந.ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் சிக்கந்தர் பாவா நன்றி கூறினார். https://www.rda.org.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today