தென்காசி,  நவ.6:

தென்காசி மாவட்டத்திலுள்ள அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.  இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் நேற்று காலை முதலே மழை இல்லை. வெயில் அடித்தது. அவ்வப்போது மழை பெய்வது போல் மேகங்கள் கூடினாலும் வெயிலின் தாக்கமே அதிகமாக இருந்தது.

மழை குறைந்த போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்கனவே பெய்த தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து குறையாமல் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 325 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப் படுகிறது.

கருப்பாநதி அணை நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை அவ்வப்போது நிரம்பி வழிகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 126 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 30 கன அடியாகவும், வெளியேற்றம் 45 கன அடியாகவும் உள்ளது.

கடையம் அருகே உள்ள ராமநதி அணை நேற்று நிரம்பியது. 84 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 82 அடியை எட்டி, நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய உபரி நீரானது முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. அதாவது அணையின் முக்கிய 2 மதகுகள் வழியாக அணைக்கு வரக்கூடிய 60 கனஅடி நீர் அப்படியே முழுமையாக வெளியேற்றப்படுகிறது. 

இதேபோல் கடையம் கடனாநதி அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். 

தென்காசி மாவட்டத்தில் அணைகள் நிரம்பியும் அணைகளுக்கு வரத்து அதிகரித்துள்ள நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்துள்ளது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு மீது தண்ணீர் விழுகிறது.

இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவி வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்களின் பாகங்கள் அருவிக்கரையில் சிதறிக் கிடக்கின்றன. பெண்கள் உடை மாற்றும் அறையில் சுவர் சேதம் அடைந்து உள்ளது. https://www.tenkasi.nic.in,

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today