நெல்லை, சூலை 30:

நெல்லை மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைகளில்  மக்கள் கூட்டம் அலைமோதியது.  

நெல்லை மாவட்டத்தில் கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 2-வது தவணை போடுவதற்கான காலக்கெடுவான 28 நாட்களை கடந்தும் தடுப்பூசி போட முடியாமல் தவித்து வந்தனர். 

இந்த நிலையில் மத்திய அரசு தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்கப்பட்டது. அந்த தடுப்பூசிகள் நேற்று  கொண்டு வரப்பட்டு தேவையானவர் களுக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

முதல் தவணையாக  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் நேற்று அரசு மருத்துவமனை களுக்கு  படையெடுத்தனர்.

காலை முதலே மருத்துவ மனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி அங்கு தயார் நிலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி சமூக இடைவெளியுடன் இருக்குமாறு கூறினர். பின்னர் டோக்கன் எண் அடிப்படையில் வரிசையாக பெயர், ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்தனர்.

 சென்னையில் இருந்து மருந்து கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர். 

ஒருசிலர் முதல் தவணையாக கோவேக்சின் தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டு வந்தனர். ஆனால் அவர்கள் தடுப்பூசி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

 மதியம்  நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரிக்கு தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. இங்கு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அவர்களுக்கு வரிசையாகவும், வேகமாகவும் தடுப்பூசி போட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல் பிற மருத்துவமனைகளிலும்தடுப் பூசி போடும் பணி தொடங்கியது. ஏற்கனவே அவர்களது விவரம் பதிவு செய்யப்பட்டு விட்டதால், தடுப்பூசிகள் வந்ததும் வேகமாக போட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். 

நெல்லை மாவட்டத்துக்கு நேற்று 3 ஆயிரத்து 360 கோவேக்சின் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது. அதில் 1,500 தடுப்பூசிகள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது. 

பாளையங்கோட்டை பெருமாள்புரம், சந்திப்பு மேலவீரராகவபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வைராவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 300 தடுப்பூசிகள், பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 100 தடுப்பூசிகள், ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 210 தடுப்பூசிகள், பணகுடிக்கு 250 தடுப்பூசிகள், முனைஞ்சிப்பட்டிக்கு 100 தடுப்பூசிகள், திருக்குறுங்குடிக்கு 60 தடுப்பூசிகள், பத்தமடை, உக்கிரன்கோட்டைக்கு தலா 50 தடுப்பூசிகள், முக்கூடல், திசையன்விளைக்கு தலா 70 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. 

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today