நெல்லை,  ஆக.7:

காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்துடன் இணைந்த எஸ்.ஆர்.இ.எஸ்.  தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தினர்  நெல்லை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும். ரயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. ரயில்வே தொழிலாளர் அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். 

டிராபிக் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலையை புகுத்தக்கூடாது. நிறுத்தி வைத்த 18 மாத சம்பள உயர்வு தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ரயில் நிலைய ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் பொது செயலாளர் சூரிய பிரகாசம் தலைமை தாங்கினார். மதுரை கோட்ட செயலாளர் கஜ்னா முன்னிலை வகித்தார். 

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச் செலயாளர் ஆவுடையப்பன், நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, ரெயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். 

 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.இ.எஸ். மதுரை கோட்ட தலைவர் ஜெயபாண்டியன், செயல் தலைவர் நாகேந்திரன், நெல்லை கிளை தலைவர் பழனி, செயலாளர் இம்மானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today