நெல்லை, ஆக.1-


நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணி தொடங்கியது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அதனுடன் இணைந்திருந்த மாவட்டங்கள் என மொத்தம் 9 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இந்த மாவட்டங்களில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தேர்தலை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு உத்தரவுப்படி அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

முன்னதாக அவர்களுக்கு வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சசிகலா, நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

இதில் தேர்தல் அலுவலர்களாக செயல்பட இருக்கும் மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் 204 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு தலா ஒரு ஊராட்சி தலைவரும், 1,731 வார்டு உறுப்பினர்களும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

இவர்களில் இருந்து ஊராட்சி துணைத்தலைவர்கள் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது வார்டு உறுப்பினர்களில் ஒருவர் துணைத்தலைவராக உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதேபோல் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மாதேவி, அம்பை, களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய 9 யூனியன்கள் உள்ளன. அந்த யூனியன்களில் 122 கவுன்சிலர்கள் மக்களால் வாக்களித்து தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்களில் இருந்து யூனியன் தலைவர், துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இதேபோல் 12 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்களில் இருந்து தலைவர், துணைத்தலைவர் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 10 யூனியன்கள் உள்ளன. இங்கு 144 யூனியன் கவுன்சிலர்கள், 14 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோல் 221 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

இந்த தேர்தலில் வாக்காளர்கள் தலா 4 வாக்குகள் அளிக்க வேண்டும். ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். ஊரக தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. வாக்குச்சீட்டு முறைப்படியே தேர்தல் நடத்தப்படும்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெறப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் இருந்து உள்ளாட்சி வார்டுகள் அடிப்படையில் புதிய பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

மேலும் பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு, சமுதாய வாரியாக இடஒதுக்கீடு ஆகியவையும் கணக்கீடு செய்து அறிவிக்கப்படும்.

வருகிற 7-ந்தேதி வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாரித்து அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காலமாக இருப்பதால் 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. எனவே, கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today