நெல்லை, ஆக.20:

களக்காடு பகுதியில் மஞ்சள் காமாலை நோய் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர்  விஷ்ணு தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் களக்காடு பெரியதெரு, ஞானசம்பந்தபுரம், சரோஜினிபுரம், கிருஷ்ணன் கோவில் தெரு, தோப்புத்தெரு, சிவந்தி ஆதித்தனார் நகர், சிதம்பரபுரம், தம்பிதோப்பு, எஸ்.என்.பள்ளிவாசல், படலையார்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 79 பேர் இதுவரை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, நெல்லை மற்றும் வெளியூர்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைதொடர்ந்து களக்காடு பேரூராட்சி மற்றும் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார குழுவினர் நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுகாதார குழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து, குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என்று சோதனை செய்து வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு  களக்காடு பகுதியில் ஆய்வு செய்தார். படலையார்குளத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அவர் சிதம்பரபுரத்திற்கு சென்று மஞ்சள் காமாலை நோயால் பாதிப்படைந்த நோயாளிகளின் வீட்டிற்கு சென்று உடல்நலம் விசாரித்தார். 
மேலும் சிதம்பரபுரத்தில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீரில் குளோரின் முறையாக கலக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.
பின்னர் வீடுகளுக்கு சென்று வீட்டு பயன்பாட்டிற்காக பிடித்து வைத்துள்ள தண்ணீர் டிரம்களையும் பார்வையிட்டார். அதனைதொடர்ந்து அவர் தனியார் டிராக்டர்கள், பொதுமக்களுக்கு சப்ளை செய்ய குடிநீர் பிடித்து வந்த சிவபுரம் நீரோடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-களக்காடு பகுதியில் பரவிய மஞ்சள்காமாலை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 17-ந் தேதி முதல் யாருக்கும் மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு ஏற்படவில்லை. ஏற்கனவே பாதிப்பு அடைந்தவர்களும் நோய் நீங்கி உடல் நலம் பெற்றுள்ளனர்.
 தண்ணீர் வரத்து குறைந்துள்ளதாலும், நோய் பரவியதாலும் களக்காடு சிவபுரம், தேங்காய் உருளி அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பேரூராட்சியினர் சிவபுரத்தில் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஆட்சித்தலைவருடன் நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா, இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் சுகாதார துறையினர், வருவாய் துறையினர் சென்றனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today