நெல்லை,  டிச.9:

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்   அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் சிறப்பு தொழில் கடன் மேளா  நடைபெற்றது. இதில் 7 பேருக்கு ரூ.5.72 கோடி மதிப்பில் கடன் அனுமதி ஆணைகள், ஒருவருக்கு ரூ.22½ லட்சம் ஆஸ்பத்திரி நிறுவ முதல் கட்ட கடன் உதவியும் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு வழங்கினார்.

மேலும் ரூ.6 கோடி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு  கூறியதாவது:-

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள கிளை அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி வரை சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு திட்டங்கள், மத்திய-மாநில அரசுகளின் மானியம் உள்ளிட்ட பல்வேறு விரிவான விளக்கங்கள் அளிக்கப்படும். மேலும் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.1½ கோடி வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்துக்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிப்காட் திட்ட அலுவலர் நசீர் அகமது, சிட்கோ வளர்ச்சி அலுவலர் கலாவதி, முன்னோடி வங்கி மேலாளர் கிரேஷி, மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் நாகஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். https://www.tirunelveli.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today