தென்காசி, சூலை 28:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் குத்துவிளக்கு ஏற்றினார். 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்பு மாநில தலைவர்  ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு ‘ரிப்பன்’ வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து  நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மாநில இணைச்செயலாளர் நயன்சிங், நெல்லை மர வியாபாரிகள் சங்க தலைவர் மரிய ஜான், பிளாஸ்டிக், பித்தளை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன்,   தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நெல்லை மாவட்ட செயலாளர் எம்.ஆர்.குணசேகரன் வரவேற்று பேசினார். எம்.ஆர்.சுப்பிர மணியன், வணிகர் நல வாரிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார். மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் உறுதிமொழி எடுத்தனர்.

கூட்டத்தில், மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சின்னதுரை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் நாடார், தலைமைச் செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், தென்காசி மேற்கு மாவட்ட தலைவர் வைகுண்டராஜா, நெல்லை ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் சோனா.வெங்கடாசலம் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். நெல்லை தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க செயலாளர் விநாயகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்பு மாநில தலைவர்  ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிம கட்டணம் செலுத்தி பதிவு நீட்டிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வணிகர் நல வாரியத்தில் வணிகர்கள் எந்தவித கட்டணமும் இன்றி உறுப்பினர் ஆகலாம் என அனுமதி அளித்து உள்ளதற்கும் நன்றி தெரிவிக்கிறோம். 
கடைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அண்டை மாநிலங்களில் பான்பராக் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகிறது. எனவே புகையிலை பொருட்களை கட்டுப்படுத்த ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும். 
இந்த பொருட்களை விற்பனை செய்வதை கண்டுபிடிப்பதாக கூறி போலீசார் அனுமதிக்கப்பட்ட பீடி, சிகரெட் போன்ற பொருட்களையும் அள்ளிச் செல்கிறார்கள். இதை தவிர்க்க வேண்டும். 
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. எனவே கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மழையால் வியாபாரிகள் பாதிக்கப்படும்போது அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆன்லைன் வணிகம் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களை நமது நாட்டுக்குள் அனுமதிப்பது, சிறு வியாபாரிகள், வணிகர்களை கடுமையாக பாதிக்கும். எனவே உள்நாட்டு வணிகத்தை சீரழிக்கும் ஆன்லைன் வணிகத்துக்கு தடை விதிக்க வேண்டும். 
வியாபாரிகள் கொரோனா எனும் கொடிய நோயை தடுக்க 2 தவணை தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது போதுமானது ஆகும்.
நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் வியாபாரிகளின் மார்க்கெட்டுகளை உடைத்து நீண்டநாட்களாக போட்டு உள்ளனர். எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடித்து வியாபாரிகளுக்கு கடைகளை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today