நெல்லை , டிச.6:

வாழை மற்றும் வெண்டை பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என்று திருநெல்வேலி , மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர்
(பொ) சூ.சுபாவாசுகி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் போது எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்பு ஏற்படுகிறது.

அந்த காலகட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்வதன் மூலம் தவிர்க்கலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் வெண்டை பயிருக்கு மானூர் வட்டாரத்தில் மானூர் பிர்க்காவிலும், வாழை பயிருக்கு நாங்குநேரி வட்டாரத்தில் பூலம் , நாங்குநேரி , மூலக்கரைபட்டி மற்றும் விஜயநாராயணம் பிர்க்காவிலும் , வள்ளியூர் வட்டாரத்தில் வள்ளியூர் , பணக்குடி , பழவூர் மற்றும் லெவிஞ்சிபுரம் பிர்க்காவிலும் , இராதாபுரம் வட்டாரத்தில் இராதாபுரம் , சமூகரெங்கபுரம் மற்றும் திசையன்விளை பிர்க்காவிலும் ஆக மொத்தம் 4 வட்டாரங்களில் உள்ள 12 பிர்க்காக்களில் ராபி பருவத்தின் கீழ் இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழை மற்றும் வெண்டை பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே வாழை பயிரிடும் விவசாயிகள் வாழைப்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 3413 வீதம் 31.01.2022 – குள்மற்றும் வெண்டை பயிரிடும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 725 / வீதம் 15.02.2022 – குள் பிரிமியம் செலுத்த வேண்டும். வாழை மற்றும் வெண்டை பயிரிட்ட விவசாயிகள் பொது சேவை மையம் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பயிர் காப்பீடு கட்டணத்தை செலுத்தலாம்.

மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மானூர்  இ.சண்முகநாதன்- 9488970629, நாங்குநேரி கே. வள்ளியம்மாள் – 89034331728, வள்ளியூர் எஸ்.என். திலீப் – 7598392194,  இராதாபுரம் டி.இசக்கிமுத்து – 9994905739 ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என திருநெல்வேலி , மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) சூ.சுபாவாசுகி  தெரிவித்துள்ளார்.  https://www.tnagrisnet.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today