நெல்லை டிச 6:
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கியதை அடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-, மாணவிகள் நேரடி வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது தவிர பள்ளி அல்லாத பிற இடங்களிலும் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் முதற்கட்டமாக பாலியல் தொந்தரவு குறித்து மாணவியர் புகார் தெரிவிக்க வசதியாக கல்வி உதவி வழிகாட்டி மையம், குழந்தைகள் உதவி எண் குழந்தைகள் நலக் குழுமத்தின் வாட்ஸ்- அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், தொந்தரவுகள் குறித்து தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஈரோடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திண்டலில் நடந்தது. இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 420-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கூடுதல் எஸ்.பி., கனகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் போக்சோ சட்ட பிரிவு குறித்தும், பள்ளியில் வீட்டில் பொது இடங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொந்தரவு குறித்து தகவல் தெரிவிக்க முன்வர வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கேட்டுக் கொண்டார்.
பள்ளியில் புகார் பெட்டி பயன்பாடு, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: மாணவ, -மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அல்லது தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறித்தும் தைரியமாக புகார் தெரிவிக்கும் வகையில் மாணவ, -மாணவிகள் படிக்கும் அந்தந்த பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதிலும் மாணவ-, மாணவிகள் தங்கள் பிரச்சினையை குறித்து தெரிவிக்கலாம். ஒவ்வொரு புகார் பெட்டிக்கும் இரண்டு சாவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சாவி மாவட்ட கல்வி அலுவலகம் வசம் இருக்கும், மற்றொரு சாவி அந்தந்த பள்ளிகளுக்கு உட்பட்ட போலீஸ் நிலையம் வசம் இருக்கும். புகார் பெட்டி குறிப்பிட்ட நாட்களில் ஒருமுறை திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். https://www.tnschools.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today