தென்காசி, மே 31-

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சாலடியூர் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கை முன்னிட்டு கடை கடந்த 9-ந்தேதி மூடப்பட்டது. இந்த கடைக்கு காவலாளியாக சந்தானகிருஷ்ணன் என்பவர் இருந்து வருகிறார். 
இந்த நிலையில்  அதிகாலை 3 மணிக்கு கடையின் பின்புறம் சத்தம் கேட்டதும், சந்தானகிருஷ்ணன் பார்க்கச் சென்றார். அப்போது அங்கு ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து அந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் பொடியனூரைச் சேர்ந்த கணேசன் (வயது 51) என்பவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த கடையில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஜன்னல் உடைக்கப்பட்ட நிலையில் மதுபாட்டில்கள் எதுவும் திருட்டு போகவில்லை என்று கூறப்படுகிறது. 
ஆனால் கண்காணிப்பு கேமரா, ஹார்ட் டிஸ்க்கை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிருபர் நெல்லை டுடே