தென்காசி,  ஆக.12:

தென்காசி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள்  பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்  செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தென்காசி மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத் திறனாளி மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வயதுக்கேற்ற வகுப்பில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்கான கணக்கெடுப்பு பணிகள்  ஆகஸ்ட் மாதம் 10ந் தேதி முதல் 31ந் தேதி வரை நடைபெறுகிறது.

சிறப்பு பயிற்சி தேவைப்படும் மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி மையம் மூலம் சிறப்பு பயிற்சி அளித்து ஏப்ரல் முதல் வாரத்தில் நிரந்தர பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர். மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு, அவர்களின் இயலாமையை பொறுத்து பள்ளி மற்றும் பள்ளி ஆயத்தப் பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும்.

பள்ளிக்கு வர இயலாத மாணவர்களுக்கு இல்லம் சார்ந்த கல்வி என்கிற அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி தரப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் 6 முதல் 19 வயது வரையிலான பள்ளி செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகள் இருப்பது தெரிய வந்தால், அதுபற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக கைபேசி 98422 67069 என்கிற எண்ணை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு  தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் 

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today