நெல்லை,  டிச.13:

விக்கிரமசிங்கபுரம் அருகே பாறைக்குள் சிறுத்தை பதுங்கி இருந்தது. இதனை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம் மலையடிவாரத்தில் திருப்பதியாபுரம், செட்டிமேடு, கோரையார்குளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு கிராம மக்கள் விவசாயம் செய்து வருவதோடு வீடுகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளையும் வளர்த்து வருகின்றனர். மலையடிவார கிராமமாக இருப்பதால் வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் காட்டுப்பன்றி, மிளா, கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதோடு அடிக்கடி கிராமத்திற்குள் சிறுத்தை நுழைந்து வீட்டில் வளர்க்கும் ஆடு, கன்றுக்குட்டி, நாய் உள்ளிட்ட விலங்குகளையும் வேட்டையாடி அட்டகாசம் செய்து வருகின்றன. 

இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த சிறுத்தை தற்போது மாலை நேரத்திலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆடு, நாய்களை தூக்கிச் செல்கின்றன. மலையடிவாரத்தில் உள்ள குகையில் பதுங்கியிருந்து மனிதர்களின் நடமாட்டத்தையும் ஆடு, நாய்கள் உள்ள இடங்களையும் நோட்டமிடும் சிறுத்தை பகல் நேரத்திலேயே ஊருக்குள் நுழைந்து வேட்டையாடுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாறையில் பதுங்கி இருந்த சிறுத்தையை சிலர் படம் பிடித்துள்ளனர். இதனால் பகல் நேரத்திலும் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறாமல் இருக்க சூரிய மின்வேலி இருந்தும் அது முறையாகப் பராமரிக்கப்படாமல் செயலிழந்து உள்ளதால் வனவிலங்குகள் எந்தவித தடையுமின்றி வெளியேறுகின்றன.

எனவே சூரிய மின்வேலி, அகழி உள்ளிட்டவற்றை வனத்துறையினர் உடனடியாக அமைத்து வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.forests.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today