தென்காசி,  செப்.20-

தென்காசி மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் 9918 வாக்குப்பதிவு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். தென்காசி மாவட்டம் , ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு , மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் தேசிய தகவலியல் மையத்தின் இணைய மென்பொருள் உதவியுடன் நடைபெற்றது.
 முதல் கட்ட வாக்குப்பதிவு ஆலங்குளம் , கடையம் , கீழப்பாவூர் , மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 06.10.2021 அன்றும் , கடையநல்லூர் , குருவிகுளம் , சங்கரன் கோவில் , செங்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 09.10.2021 அன்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது . 


முதல் கட்ட தேர்தல் 754 வாக்குப்பதிவு மையங்களிலும் , இரண்டாம் கட்டமாக 574 வாக்குப்பதிவு மையங்களிலும் நடைபெறவுள்ளது . முதல் கட்ட வாக்குப்பதிவு மையங்களில் 5618 வாக்குப்பதிவு அலுவலர்களும் , இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மையங்களில் 4300 வாக்குப்பதிவு அலுவலர்களும் ஆக மொத்தம் 9918 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர் . வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி மூலம் நடைபெற்றது . 
பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி 24.09.2021 அன்று ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நல்லூரிலும் ,  கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி ஆழ்வார்க்குறிச்சியிலும் , கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஸ்ரீ ராம் நல்லமணியாதாவா கல்லூரி கொடிக்குறிச்சியிலும் , 
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சர்தார்ராஜா பொறியியல் கல்லூரி அத்தியூத்திலும் , குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஜிவிஎன். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அப்பனேரியிலும் , மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரி மேலநீலிதநல்லூரிலும் , சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சங்கரன் கோவிலிலும் , செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு எஸ்ஆர்எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி செங்கோட்டையிலும் , தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தென்காசியிலும் , வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு எஸ்.வீராசாமிசெட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி புளியங்குடியிலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.


  பணி ஒதுக்கீடுபெற்றவர்களுக்கு பணிக்கான ஆணை வழங்கப்படும் . பணி ஆனை பெற்றவர்கள் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பாக தேர்தல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.சுரேஷ் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( தேர்தல் ) ச.முத்திளங்கோவன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ) எ.எஸ்.எ.ஹெலன் , வட்டார வளர்ச்சி அலுவலர் ( தேர்தல் ) பி.முருகன் , தேசிய தகவலியல் மைய அலுவலர் பி. முருகன் , அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . 

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/