தென்காசி,  நவ.6:

கடையநல்லூர் அருகே பெரியாற்று வெள்ளத்தில் சிக்கிய 80 பேர் மீட்கப்பட்டனர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. 

கருப்பாநதி அணை பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தொடா்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அணைக்கு வரும் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது.

இதனால் அங்குள்ள பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் கடையநல்லூர் அருகே உள்ள கல்லாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் உள்ள தண்ணீரும் பெரியாற்று வெள்ளத்தில் கலந்து சென்றது.

இதற்கிடையே கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்றில் குளிக்க சென்ற இடத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு வரமுடியாமல் தத்தளித்தனர். அங்கிருந்து செல்போன் மூலம் கடையநல்லூர் போலீஸ், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு தென்காசி போலீஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ராஜேந்திரன், தென்காசி உதவி ஆட்சியர் ராமச்சந்திரன், கடையநல்லூர் தாசில்தார் ஆதிநாராயணன், துணை தாசில்தார் திருமுருகன், புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர்  கணேஷ்,

தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கவிதா, கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ், வாசுதேவநல்லூர் நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் தொடர்ந்து பெரியாற்றில் கூடுதல் நீர் வந்ததால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின்னர் பெரியாற்று படுகையில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் காசிதர்மம் கிராமம் வழியாக டிராக்டர், ஜீப்புகளில் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு தீயணைப்பு ஏணியில் கயிறு கட்டி அனைவரையும் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். 

இதற்கிடையே, கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பெரியநாயகம் கோவில் பகுதியில் பெரியாற்று படுகையில் காட்டாற்று வெள்ளத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் சிக்கித்தவித்தனர். இதையடுத்து தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை மாவட்ட அலுவலர் கவிதா தலைமையில், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 20 பேரை கயிறு கட்டி மீட்டனர். https://www.tnfrs.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today