நெல்லை, ஆக.16:
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. காலை 9.10 மணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உடன் சென்றார்.
இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார். பத்தமடை பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த முத்துராமலிங்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருடைய குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அவருடைய குடும்பத்தினருக்கு ஆட்சியர் வழங்கினார்.
மேலும் பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம், தேய்ப்புபெட்டிகள், மரம் ஏறும் கருவி, உதவித்தொகை என 18 பேருக்கு ரூ.35 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து போலீசாரின் யோகா கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி ஆட்சியர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி (சேரன்மாதேவி), மூர்த்தி (நெல்லை), மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக் கண்ணன், துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பேரூராட்சி உதவி இயக்குனர் குற்றாலிங்கம், பேரூராட்சிகளின் மண்டல அலுவலக செயல் அலுவலர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவையொட்டி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
நிருபர் நெல்லை டுடே