தென்காசி,  அக்.28:

புளியங்குடியில் மரக்கடையில் தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான கட்டைகள் எரிந்து சேதம் அடைந்தன.


தென்காசி மாவட்டம் புளியங்குடி பாலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசரவணன் (வயது 40). இவரது உறவினர் அழகுகிருஷ்ணன் (28). இவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் புளியங்குடி நகர தலைவராக உள்ளார். 
இவர்களுக்கு சொந்தமான மரக்கடை புளியங்குடி அரசு ஆஸ்பத்திரி தெருவில் உள்ளது.

இந்த மரக்கடையில் அதே பகுதியை சேர்ந்த மூக்கையா (77) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான தேக்கு கட்டைகள், பிளைவுட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இரவு மரக்கடையில் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி மூக்கையா தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் தீயை அணைக்க முடியவில்லை. 

இதுபற்றி கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடை உரிமையாளர்கள் புளியங்குடி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி கவிதா உத்தரவின்பேரில் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி சேக் அப்துல்லா, கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி குணசேகரன், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயன் ஆகியோர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 ஆனாலும் அங்கிருந்த மரக்கட்டைகள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.மரக்கடையில் தீப்பிடித்தது பற்றிய தகவல் அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். 
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.tnfrs.tn.gov.in 

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today