தென்காசி, சூலை 2-

 ஆலங்குளம் அருகே   குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு இஷாந்த் (வயது 5) என்ற மகன் உண்டு. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் மகன் புவன் (4), பூபாலன் மகள் சண்முகபிரியா (5). இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவார்கள்.

இந்த கிராமத்தில் அம்மன் கோவில் உள்ளது. இதன் அருகில் குளமும் உள்ளது. தற்போது அந்த குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருக்கிறது. இந்த கோவில் பகுதியில் அங்குள்ள குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலையில் கோவில் பகுதியில் இஷாந்த், புவன், சண்முகபிரியா ஆகியோர் விளையாடிக் கொண்டு இருந்தனர். விளையாடச் சென்ற இஷாந்த் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாயார் சுகன்யா கோவில் பகுதிக்கு சென்று பார்த்தார்.

அங்கு இஷாந்த், புவன், சண்முகபிரியா ஆகியோர் இல்லாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பகுதி முழுவதும் தேடிப்பார்த்தார். மேலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்தார். ஆனால், எங்கும் குழந்தைகளை காணவில்லை. 

கடைசியாக குளத்தின் பகுதிக்கு சுகன்யா சென்று பார்த்தார். அப்போது, இஷாந்த், புவன், சண்முகபிரியா ஆகியோர் குளத்தில் மிதந்தனர். இதை பார்த்து சுகன்யா அதிர்ச்சி அடைந்து, சத்தம் போட்டார். 

அவரது அலறல் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி 3 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் 3 குழந்தைகளையும் சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இஷாந்த், புவன், சண்முகபிரியா ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இறந்த 3 குழந்தைகளின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து  ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவ இடத்தை ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர்  பொன்னிவளவன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

நிருபர் நெல்லை டுடே