தென்காசி, சூன் 27 –
கடையத்தில் பாரதியாருக்கு வெண்கல சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சபாநாயகர் மு.அப்பாவு பேசினார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்-செல்லம்மாள் தம்பதியரின் 124-வது ஆண்டு திருமண நாள் விழா, தென்காசி மாவட்டம் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட ஆட்சி தலைவர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், கடையம் ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேவாலயா நிறுவனர் முரளிதரன் வரவேற்று பேசினார். பள்ளி செயலாளர் பி.டி.சாமி, மத்தளம்பாறை ஷோஹோ தொழில்நுட்ப நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சபாநாயகர் மு.அப்பாவு , பாரதியார்-செல்லம்மாள் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான இணையவழி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 100 ஏழைகளுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு பேசியதாவது:-
கடையத்தில் பாரதியார் வாழ்ந்த இல்லம் உள்ளது. அதனை அரசுடைமையாக்க வேண்டும். அதன் அருகில் பாரதியாருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.
விழாவில்
பாரதியார்-செல்லம்மாள் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி, எழுத்தாளர் ரமணன் ஆகியோர் காணொளிக் காட்சியில் பேசினர்.
நிருபர் நெல்லை டுடே