தென்காசி,  சூலை 15-

தமிழகத்தில் 2 ஆயிரத்து 608 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என நெல்லையில்அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், எம்.பி.க்கள் ஞானதிரவியம், விஜய் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர்  விஷ்ணு வரவேற்று பேசினார்.

உணவு வழங்கல் துறை ஆணையாளர் ஆனந்தகுமார் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் ராஜாராம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாண்மை இயக்குனர் சிவஞானம், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், மார்க்கண்டேயன், எம்.ஆர்.காந்தி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள் குழந்தைவேலு, அபுல்காசிம், சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கனகராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ஜோசப் பெல்சி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நரிக்குறவர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளையும், 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். பின்னர் மாலையில் அவர் பாளையங்கோட்டை அன்புநகரில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து தாழையூத்து நவீன அரிசி ஆலையை பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நெல்லையில்  நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தேர்தல் நேரத்தில் அறிவித்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 2 கோடியே 9 லட்சம் அரிசி ரேஷன் கார்டுகளுக்கும் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகை பொருட்களையும் வழங்கியுள்ளார். 99 சதவீதம் பேருக்கு இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்கு 6 வகை பொருட்கள் மட்டும்தான் கிடைத்தது என்று அவர் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவித்தார். அதை உடனே விசாரணை நடத்தி அந்த பெண்ணிற்கு அன்று உடனடியாக 14 வகையான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி தமிழகத்தில் நேர்மையான, தூய்மையான ஆட்சி நடக்கிறது.

தமிழகத்தில் 2 ஆயிரத்து 608 நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

ரேஷன் கடையில் அரிசி சரியான எடையில் தரமானதாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் மாவட்ட ஆட்சியர்  10 ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் 30 கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு அதிகமாக 5 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் பிரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் 158 ரேஷன் கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 140 ரேஷன் கடைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 116 ரேஷன் கடைகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 ரேஷன் கடைகளும் உள்ளன.

புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சிரமத்தை போக்குவதற்காக சபாநாயகர் அப்பாவு ராதாபுரம் தொகுதியில் சிறப்பு முகாம் நடத்துகிறார். இதேபோல் அனைத்து பகுதிகளிலும் முகாம் நடத்த வேண்டும். வாடகை கட்டிடங்களில் இயங்க கூடிய ரேஷன் கடைகளை சொந்த கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  சிறப்பு நிதி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கங்கைகொண்டான் உணவு பூங்கா அமைக்கும் பணி குறித்து ஏற்கனவே தொழில்துறை அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார்.

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today