தென்காசி, ஆக. 24:
தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சிஐடியு சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணன், குருசாமி, மாவட்ட குழு உறுப்பினர் பேச்சிமுத்து மற்றும் 10 கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.
மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.1,400 ஊதிய உயர்வுக்கான அரசாணை திருத்தம் செய்து வெளியிட வேண்டும். இவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது பணிக்கொடை ரூ.50 ஆயிரம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.
நிருபர் நெல்லை டுடே