நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை ஆய்வு செய்திட 13 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வு குழுவினர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவா விஷ்ணு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர்  விஷ்ணு கூறியதாவது:-


தமிழக அரசின் உத்தரவின்படி நாளை முதல் அனைத்து பள்ளிகளில் உள்ள 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும்இ கல்லூரிகளையும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை முதல் செயல்பட உள்ளதால், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை ஆய்வு செய்திட, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருவாய்த்துறை, மாநகராட்சிஃ உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு மேற்கொள்வதற்காக மாநகர பகுதிகளில் 4 குழுக்கள், புறநகர் பகுதிகளில் 9 குழுக்கள் என மொத்தம் 13 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆய்வு செய்து தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வார்கள்.

பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள், 18 வயதினை கடந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த சுகாதார துறையினர் மூலம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு தேவையான சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) குத்தாலிங்கம், முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தியாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/