தென்காசி, மே 31-
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவைப்படும் மளிகைப் பொருட்கள் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் 28.05.2021-ம் தேதிய அறிக்கை மற்றும் அரசாணை எண்:391, நாள்:29.05.2021 படி, கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு 07.06.2021 காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், தென்காசி மாவட்டத்தில் நடைமுறையில் இருந்து வரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி  அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், மளிகை பொருட்களை அந்தந்த மளிகை கடைகளால், வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சி பகுதிகளில் 133 கடைகளும், பொருட்களை விநியோகம் செய்ய 150 வாகனங்களும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 431 கடைகளும், பொருட்கள் விநியோகம் செய்ய 408 வாகனங்களும் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 202 கடைகளும், அடையாளம் காணப்பட்டுஇ பொருட்களை விநியோகம் செய்ய 198 வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவற்றினை கண்காணிக்கும் பொருட்டு, 285 பொறுப்பு அலுவலர்களும் 72 கண்காணிப்பு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள துணை
ஆட்சியர்/உதவி இயக்குநர் நிலையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

| தென்காசி நகராட்சி அலுவலகம் -04633 – 222228, சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம்- 04636 – 224719,  கடையநல்லூர் (நகராட்சி அலுவலகம்)- 04633 – 240250, செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04633 – 233058, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – 04633 – 250223, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04636 – 241327,  குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் -04632 – 251045,  மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- 04636 – 290384,  ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- 04633 – 270124,  கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04634 – 240428,  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக  கட்டுப்பாட்டு மையம் – 04633 – 290548 04633 – 1077. மேற்கண்ட அலுவலகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கு தங்களது பகுதிகளுக்குட்பட்ட மேல்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் இதன்வழி தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 13 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் ஜீன் மாதம் முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
மொத்த விற்பனையாளர்கள் உள்ளாட்சி அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் மட்டுமே விநியோகம் நடைபெற வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வித விற்பனையும் செய்ய கூடாது.
உள்ளாட்சி பகுதிகளில் வீடுவீடாக சென்று விற்பனை செய்யும் வியாபாரிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் எனவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தரும்படியும்; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  கேட்டுக் கொண்டுள்ளார்.

நிருபர் நெல்லை டுடே