தென்காசி , ஜுன் 1:
திப்பணம்பட்டியில்  பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகம் இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென தென்காசி எம்.பி.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திப்பணம்பட்டி- திப்- மீனாட்சிபுரத்தை சேர்ந்த இராமச்சந்திரன், தென்காசி எம்.பி.தனுஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கீழப்பாவூர் ஒன்றியம் திப்பணம்பட்டியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகமானது பழுமைவாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது மேற்கூரை பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் அபாய நிலையில் இருப்பதால் கடந்த சில மாதங்களாக சிறிய அளவிலான தற்காலிக கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகிறது. 
கிராம நிர்வாக அலுவலகம் என்பது வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய கிராமத்துக்கு தேவையான மிக முக்கியமான அலுவலகம் ஆகும்.
17 ஆயிரம் மக்கள் தொகை திப்பணம்பட்டி, அரியப்புரம் ஊராட்சி பகுதி மக்கள் பயன்படுத்தும் இந்த அலுவலகமானது எந்த ஒரு வசதிகளும் இன்றி ஒரு சிறிய அறையில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். எனவே பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே