தென்காசி, சூன் 11-
கடனை வசூல் செய்ய பொதுமக்களை துன்புறுத்தும் நுண்நிதி கடன் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பெற்ற கடனை முறையாக திருப்பி செலுத்த அவகாசம் வழங்குதல் தொடர்பாக நுண் நிதி கடன் நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்ததாவது:-
மத்திய அரசும், மாநில அரசும் கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறுகட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழ்நிலையில,; தமிழகம் முழுவதும் கடந்த 25-03-20 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது.
இந்த நிலையில் அவசர தேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மக்களிடம், மேற்படி கடன் தவணைத்தொகை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்த கோரி, சில நிறுவனங்கள் மிரட்டுவதாகவும், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
பெருந்தொற்று அதிகமாக பரவி உள்ள இந்த நெருக்கடியான கால கட்டத்தில் மக்களிடமிருந்து தவணை தொகையை பெறுவதில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடினமான போக்கினை தவிர்த்திட வேண்டும். மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்பியதும் கடன் தவணையினை முழுமையாக செலுத்தி விடுவார்கள்;,
நுண்நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை எண்ணிக்கையாக பார்க்காமல், குடும்பங்களாக பார்க்க வேண்டும் . ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை மேலும் பெரிய துயரத்திற்கு ஆளாக்கி விடுதல் கூடாது. கருணை உள்ளத்தோடு இந்த விசயத்தை கையாள வேண்டும். எங்கேனும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவ தாக புகார்கள் வந்தால் அதன் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதற்கு தேவையான விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும். மேலும் இது குறித்து எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் நுண்நிதி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இதையும் மீறி புகார்கள் ஏதும் எழும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) விஜயலெட்சுமி, மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) சலிமா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணு வர்தன், கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் அழகிரி, பொது மேலாளர் சுபாஷினி,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் விசுவநாதன், உதவித்திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வி.எம்.சிவகுமார், அரசு அலுவலர்கள், நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே