தென்காசி, ஜுன் 2-
தென்காசி பகுதியைச் சார்ந்த டாக்டர் மற்றும் தொழிலதிபர்கள் கலெக்டரை சந்தித்து தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 8 லட்சம் வழங்கினார்கள்.
தமிழகத்தில் நாள்தோறும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தக் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தொழில் அதிபர்கள், திரைப்பட நடிகர்கள், வசதிபடைத்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி உதவி வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் நாள்தோறும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஜிஎஸ் சமீரனை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் தென்காசி பகுதியைச் சார்ந்த ஓணம் பீடி உரிமையாளர் பாலகிருஷ்ணன், சதீஷ் பீடி உரிமையாளர் ராஜாக்கண்ணு, தென்காசி சாந்தி மருத்துவமனை டாக்டர் அன்பரசன் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியாக தென்காசி ஓணம் பிடி உரிமையாளர் பாலகிருஷ்ணன் ரூபாய் 5 லட்சமும், சதீஷ் பீடி உரிமையாளர் ராஜாக்கண்ணு ஒரு லட்சமும், தென்காசி சாந்தி மருத்துவமனை டாக்டர் அன்பரசன் 2 லட்சமும் மொத்தம் 8 லட்ச ரூபாய் வழங்கினார்கள். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் , தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மா.செல்லத்துரை, மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ்.வேலுச்சாமி, திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் கோ. சாமித்துரை, தென்காசி ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆர்.எம்.அழகுசுந்தரம், இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், நகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் த.ராமராஜ், குற்றாலம் பேரூர் செயலாளர் மந்திரம், இலஞ்சி ரவி, வல்லம் செல்வம், சுரேஷ் கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே