தென்காசி, ஜூன் 10-

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  தென்காசி மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவி ரம்யா ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாங்கள் தென்காசி மாவட்டம் தொடங்கிய உடன் திருநங்கைகளின் நலன் மேம்படவும் அவர்களுக்கு சமூக உரிமையை பெற்றுத் தரவும் தென்காசி மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கம் என்று அரசு வழிகாட்டுதலின்படி தொடங்கி 2020-ம் ஆண்டு பதிவு செய்து பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். 
தென்காசி மாவட்டத்தில் சுமார் 100 திருநங்கைகள் தனியாகவும் குடும்பத்தோடும் வசித்து வருகின்றனர். இதில் பலர் கரகாட்டம், முளைப்பாரி, வில்லிசை, மகுடம், ஒப்பாரி கலைக்குழு போன்ற பல்வேறு கிராமிய கலைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் விழாக்கள் இல்லாததால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை தென்காசி மாவட்டத்தில் 24 பேருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. மீதம் உள்ள நபர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள நிவாரணத் தொகை பெற முடியாது. 
நாங்கள் இருக்க இருப்பிடம், உண்ண உணவு இல்லாமல் தவிக்கிறோம். எனவே எங்கள் மீது கருணை கொண்டு எங்களுக்கு நிவாரணம் கிடைக்க வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் செயலாளர் தின்சிகா, பொருளாளர் மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே