தென்காசி, சூன் 24 -தென்காசி தொகுதி வளர்ச்சி பணிகளுக்காக அமைச்சர்களை பழனி நாடார் எம்எல்ஏ நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்தார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து ராமநதி – ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தினை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிற்றாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட இரட்டைகுளம் – ஊத்துமலை புதிய கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.
அடுத்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், கிராமிய பண்பாட்டு கலைஞர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் தென்காசி தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனு கொடுத்தார்.
மேலும், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், திப்பணம்பட்டியில் கால்நடை மருத்துவமனை மற்றும் அரியப்பபுரத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனைக்கு அரசு கட்டிடம் வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.
மேலும் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதியிடம் தென்காசியில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்தை உடனடியாக திறக்கவும், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும் கோரி மனு கொடுத்தார்.
அடுத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமியிடம் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கவும், தென்காசி மாவட்டத்திற்கு என தனி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை அமைக்கவும், தனி கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் அமைக்கவும் வேண்டி மனு கொடுத்தார்.
மேலும், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் ராமநதி- ஜம்புநதி கால்வாய் திட்டத்திற்கு வனத்துறையின் தடையில்லா சான்று வழங்க கோரி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மனு கொடுத்தார்.
Attachments area
நிருபர் நெல்லை டுடே