தென்காசி, சூன் 9-

கெடுபிடி செய்து கடன் தவணையை வசூலிக்கும் தனியார் நுண்நிதி நிறுவனங்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  தென்காசி  மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் விடுத்துள்ளசெய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-             தென்காசி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழும், பிற தொண்டு நிறுவனங்கள், நுண்நிதி நிறுவனங்கள் கீழும் ஆயிரக்கணக்கான மகளிர் சுயஉதவிக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். 
இக்குழுக்களுக்கு வங்கிகளும் நுண்நிதி நிறுவனங்களும் பல்வேறு தொழில்கள் செய்யவும் அத்தியாவசிய நிதித்தேவைகளை பூர்த்தி செய்யவும் கடன்களை வழங்கி திரும்ப பெற்று வருகின்றனர்.

            நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 25-03-20 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. 
இந்த நிலையில் அவசர தேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மக்களிடம், மேற்படி கடன் தவணைத்தொகை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்த கோரி, சில நிறுவனங்கள் மிரட்டுவதாகவும், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
           பெருந்தொற்று அதிகமாக பரவி உள்ள இந்த நெருக்கடியான கால கட்டத்தில், மக்களிடமிருந்து தவணை தொகையை பெறுவதில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடினமான போக்கினை தவிர்த்திட வேண்டும். இது குறித்து எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் செயல்பட வேண்டும். 
இதையும் மீறி புகார்கள் ஏதும் எழும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தனியார் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே